அரசு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

அரசு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

 https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcThx-2ysTTyuYKiJvqbKClZzhwcDRA42hmyGdyHMtQX80UKT4ms

சென்னை: அரசு பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயரை நீக்கக் கோரி தொடரப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை தம்புசெட்டி தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சரவணன் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை இணைப்பது சாதரணமாக உள்ளது.

எனவேதான் 1979-80ஆம் ஆண்டில் பெரியாரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின்போது, தெருப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சாதி மோதலை தவிர்ப்பதற்காக 1997ஆம் ஆண்டு போக்குவரத்துக்கழகத்துக்கு சூட்டப்பட்டிருந்த பெயர்கள் நீக்கப்பட்டன.

தற்போது அரசு நிதியுதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் பெயரிலும் சாதிப் பெயர்கள் இணைந்துள்ளன. சாதிப் பெயர்களுடன் பள்ளி, கல்லூரிகளை அரசு நடத்தக்கூடாது. சமுதாய பெரியவர்கள், கல்வி நிறுவங்களை நிறுவியவர்கள், நன்கொடை வழங்கியவர்களின் பெயரை போடுவதில் தவறில்லை. அவர்களின் சாதியைச் சேர்ப்பதுதான் தவறு. சாதி வேற்றுமைகள் பள்ளிக்குழந்தைகளின் மனதில் பதிந்துவிட்டால் அதை அகற்றுவது கடினம்.

சமீபத்தில்கூட மதுரை அருகே வடுகப்பட்டியில், சாதி இந்து பிரிவைச் சேர்ந்த ஒருவருடைய செருப்பை சுமப்பதற்கு 12 வயது தலித் பையன் கட்டாயப்படுத்தப்பட்டான் என்ற தகவல்கள் வெளிவந்தன. பல தலித் மாணவர்கள் செருப்பு அணிந்து பள்ளிக்குச் செல்வதில்லை. மேலும் சில இடங்களில் முக்கிய சாலை வழியாகச் செல்லாமல், வயல்வெளி வழியாக பள்ளிகளுக்கு தலித் மாணவர்கள் செல்கின்றனர்.

இது போன்ற சூழ்நிலைகளில், சாதிப் பெயர்களில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே சாதி வேற்றுமை ஏற்படுவதோடு, ஒரு சாதியைவிட மற்ற சாதியினர் பெரியவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். தலித் குழந்தைகள்தான் வேற்றுமையை உணர்கின்றனர். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். சாதிப் பெயரில் பள்ளிகளை நடத்துவதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை. எனவே இப்படிப்பட்ட நிலையை ஒழிப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.

எனவே அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு, முன்பு விசாரனைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதிகள்,

செப்டம்பர் 10ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்