குஜராத் மாநிலம், கோத்ராவில் 2002ஆம் ஆண்டு நேரிட்ட கலவரத்தின் போது பிரிட்டனைச் சேர்ந்த 3 பேரும், இந்தியாவைச் சேர்ந்த அவர்களது கார் ஓட்டுநர் ஒருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து ஹிம்மத்நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி ஐ.சி. ஷா தீர்ப்பை அறிவித்தார். அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவு (கொலை), 307ஆவது பிரிவு (கொலை முயற்சி) ஆகிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது. ஆகையால், குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள நபர்களை அதில் இருந்து விடுவித்து உத்தரவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றார் நீதிபதி.
கடந்த 2002ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியன்று அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சபர்மதி விரைவு ரயிலில் யாத்ரீகர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். கோத்ரா ரயில் நிலையத்துக்கு அவர்களின் ரயில் வந்தபோது, அதற்கு தீ வைக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் பலியாகினர். இதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது.
இந்த கலவரத்தின்போது, சபர்கந்தா மாவட்டத்தில் பிரந்திஜ் என்னுமிடத்தில், இம்ரான் தாவூத் என்பவரும், பிரிட்டனைச் சேர்ந்த அவரது உறவினர்களுமான சையது தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத் ஆகியோரும், இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் யூசுப் பிரகார் என்பவரும் தாக்குதலுக்கு ஆளாகினர். இதில், சையது, ஷகீல், முகமது அஸ்வத், யூசுப் ஆகியோர் இறந்தனர்.
இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து, குஜராத் அரசுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்று பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இருப்பினும், குஜராத் அரசுடனான தொடர்பை பிரிட்டன் அரசு 2012ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பித்துக் கொண்டது.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக பிரந்திஜ் பகுதியைச் சேர்ந்த மிதன்பாய் படேல், சந்து என்ற பிரஹலாத் படேல், ரமேஷ் படேல், மனோஜ் படேல், ராஜேஷ் படேல், கலுபாய் படேல் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஹிம்மத்நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நரோடா பாட்டியா கலவரம்: ஆயுள் சிறைக் கைதிக்கு ஜாமீன்
கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம், நரோடா பாட்டியா பகுதியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில், ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கிர்பால் சிங் சாப்தா என்பவருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கிர்பால் சிங் தாக்கல் செய்திருந்த மனுவின் பேரில், அவருக்
கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதிகள் ஆர்.ஆர்.திரிபாடி, ஆர்.டி.கோத்தாரி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து ஆமதாபாதின் நரோடா பாட்டியா பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 97 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, அவருடைய தனி உதவியாளர் கிர்பால் சிங் சாப்தா உள்பட 31 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணை நீதிமன்றத்தில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. தனது உடல் நிலை மோசமானதின் பேரில், மாயா கோட்னானி ஜாமீன் பெற்றிருந்தார். இதேபோல் தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கிர்பால் சிங், மனு தாக்கல் செய்திருந்தார்.
சனி, 28 பிப்ரவரி, 2015
பிரிட்டனைச் சேர்ந்த மூவர் கொலை வழக்கு: 6 பேர் விடுதலை தவிர எனக்கு வேறு வழி இல்லை : நீதிமன்றம்
10:29 AM
இந்திய செய்திகள், குஜராத் இனப்படுகொலை, India News