விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி - ஆட்சியதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தரங்கம்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, மதிமுகவைச் சேர்ந்த மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய சூழலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி’ என்னும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடத்தப் பட்டது. கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் பேசிய அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி ஆட்சி கோட்பாட்டை வலியுறுத்தி பேசினார்கள்.
மனிதேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்ஏ. பேசியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக, சுதந்திரா கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாக காயிதே மில்லத் காரணமாக இருந்தார். அப்போது கூட்டணி ஆட்சி என்ற முறையில்தான் அந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற திமுக, கூட்டணி ஆட்சிக்கு மறுத்துவிட்டது. காயிதே மில்லத் மட்டும் அப்போது வலியுறுத்திக் கேட்டிருந்தால் அப்போதே கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் கூட்டணி என்றால் இனிக்கிறது. ஆனால், கூட்டணி ஆட்சி என்றால் கசக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக டெபாசிட் பெறுவதற்கே விடுதலை சிறுத்தைகளும், மமகவும் தான் காரணமாக இருந்தன. ஆனால், நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவினர் சரியாக ஒத்துழைக்கவில்லை. அனைத்து விளிம்பு நிலை சமுதாயத்தினர் மேம்பாடு அடைய கூட்டணி ஆட்சி அவசியம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசியதாவது:
1960-களில் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற கோட்பாட்டினை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். ஏனெனில் அப்போது தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, பொதுவுடைமை கட்சிகள் மட்டுமே இருந்தன. எனவே, அண்ணா அப்படி வலியுறுத்தினார். ஆனால், இப்போது நிலைமை வேறு. அண்ணா மட்டும் இப்போது இருந்திருந்தால் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் கூட்டணி ஆட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்திருப்பார். இன்றைய சூழலில் கூட்டணி ஆட்சிதான் மிகவும் அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி உரையாற்றினர். அவர்களைத் தொடர்ந்து திருமாவளவன் கூட்டணி ஆட்சி குறித்து தலைமை உரையாற்றினார்.
வியாழன், 11 ஜூன், 2015
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அவசியம்: விடுதலை சிறுத்தைகள் நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தல்...
1:02 PM
அரசியல், தமிழக செய்திகள், பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மமக, Tamilnadu