சஹாரா தமிழ்: Tamilnadu

ads

Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜூலை, 2019

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரக்கன்றுகளும்..! மத நல்லிணக்கமும்..!!

  தோப்புத்துறை கோவில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு நீர் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தோப்புத்துறை ஜமாத் மன்றத் தலைவர் I.நவாஸ்தீன்,டாக்டர் அக்பர் அலி,p.சாகுல் ஹமீத்,ஹாசிப் புகாரி மற்றும் காதர் மெய்தீன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

விழாவிற்கு வந்த பொதுமக்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.சுமார் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இயற்கையை பாதுக்காக்கும் இந்த முயற்ச்சியை அனைவரும் பாராட்டினர்.மேலும் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் செயல் இது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

பொதுநலன் கருதி...

#நீர்_விழிப்புணர்வு_பிரச்சார_அமைப்பு
தோப்புத்துறை

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை..! அதிகாரிகளிடம் ஒப்படைத்த முஸ்லிம் பெரியவரின் மனித நேயம்..!!

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிறது #நாச்சிக்குளம். இங்கு முஸ்லீம்களும், தேவர்களும், தலித்துகளும் நிறைந்து வாழ்கிறார்கள்.

இவ்வூருக்கு அருகில் உள்ள #சிறுபனையூர் கிராமத்தில் நேற்று (04.08.18) #சாகுல்_ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றிப் போனது.

அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது.

அதை பிரித்துப் பார்த்தப் போது அதில் #ஐம்பொன்_சிலை இருப்பது தெரிய வந்தது.

உடனே சாகுல் ஹமீது அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார்.

சிலை கடத்தல் பரபரப்புகள் உலா வரும் நிலையில், ஒரு முஸ்லீம் பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனைவரும் சாகுல்ஹமீது அவர்களை பாராட்டி வருவது அப்பகுதியின் சமய நல்லிணக்கத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது.

#மலரட்டும்_மனிதநேயம்..!
#பரவட்டும்_சமூக_நல்லிணக்கம்..!!

வியாழன், 20 அக்டோபர், 2016

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா அதிகளவில் நடைபெற்றது பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல் எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதே தேதியில் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சி சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்லில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி, திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பு- ஓம்சக்தி சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏற்கனவே அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு அவசர சட்டம்


சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து 28 நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த மாதம் அப்போலோவுக்கு சென்று முதல்வரை பார்த்தார். இதன்பின், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து துறைகளும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.35 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசிதழில், கவர்னர்  வித்யாசாகர் ராவ் நேற்று மாலை ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ஐ திருத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாததாலும், தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அவசர சட்டம் பிறப்பிப்பது அவசியமாகிறது. இந்த அவசர சட்டம், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் 3வது திருத்த அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் (மூன்றாம் திருத்தம்) அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம், தமிழக அரசிதழில் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் கவுன்சிலர்கள் அல்லது வார்டு உறுப்பினர்களின் பதவிக்கு சாதாரணமாக ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கிடையே இந்த அறிவிப்பாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4ந் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை பிறப்பிக்க வேண்டும். டிசம்பர் 31ந் தேதிக்கு மிகாமல் கூடிய விரைவில் அந்தத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான பதவி காலம் விரைவில் முடிய இருப்பதாலும், 5 ஆண்டு கால பதவி காலத்தை மேலும் நீட்டிக்க முடியாது என்பதாலும், உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக, தேர்தல் முடியும் வரை தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளான நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. அதுபோல, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. இந்த அவசர சட்டம், அரசின் முடிவை நடைமுறைப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம், அதிகாரிகளின் கைக்கு சென்றுள்ளது.

ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி

புதுடெல்லி: பாராளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருக்கிறோம். ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறினார்.

சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டு அவரவர் நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்பு, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி எழுதிய கடிதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நஜீம் ஜைதி கூறியதாவது:-

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் இதுபோல் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அதே நேரம் மத்திய அரசும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வித உதவிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படைகளை ஒதுக்கித்தரவேண்டும். ஏனென்றால் இந்த தேர்தல்களுக்காக அதிக அளவில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அவற்றை வாங்குவதற்கு அதிக நிதியும் (ரூ.9 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா? அல்லது தனித்தனி தேதிகளில் இருக்குமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசும்போது, “கட்டாயமாக வாக்களிப்பது பரவலாக சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால் இந்த சிந்தனை நடைமுறையில் சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டார்.

புதன், 19 அக்டோபர், 2016

கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு...

கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் இயங்கிய ஸ்ரீ கிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி என்ற தனியார் பள்ளிகளில் சமையல் அறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி பரிதாபாமாக உயிரிழந்தனர். மேலும் 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயம் செய்வதற்கு, ஏற்கெனவே ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,  பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடும் தீக்காயம் அடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், மேலும் 3  குழந்தைகளுக்கு. 5 லட்சமும், சிறிய காயமடைந்த 10 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பரிந்துரையில் நீதிபதி வெங்கட்ராமன் அளித்தார்.

இந்த இழப்பீடு தொகை பொதுமானதாக இல்லை  என தீ விபத்தில் உயிர் இழந்த மற்றும்  பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் தொரிவிக்கபட்டது. மேலும்  இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் இன்பராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டாது. அந்த மனுவில், மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் இழப்பீடு தொகையின் அடிப்படையில், நீதிபதி வெங்கட்ராமன் இந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒருவருக்கு உயிர் வாழ உரிமை உள்ளது. இவர்களது உயிரை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு என்று நிர்ணயம் செய்து, அந்த தொகையை பெற்றோருக்கு வழங்க வேண்டும். தீ காயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.20 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.5  லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

கடந்த முறை விசாரணையில், தமிழக அரசு சார்பில் இழப்பீடு தொகை அதிகரிக்க முடியாது, இருப்பினும் இழப்பீட்டு தொகை கேட்டு விண்ணப்பம் செய்த நாளிலிருந்து, 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிபதி வெங்கட்ராமன் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்த இழப்பீட்டு தொகைக்கான வட்டியை, தீ விபத்து நடைபெற்ற நாளில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும். அதுவும் வட்டி தொகையை 9 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை பரிசிலிப்பாக தெரிவிக்கபட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பதிலளிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு இன்று  தலைமை நீதிபதி கவுல் ,நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வட்டியுடன் 2004 ஆண்டில் இருந்து வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்தொகையை கடந்த 2004 முதல் 2011 வரை 8 சதவீதமும், 2011 முதல் 2012 வரை 8.6 சதவீதமும், 2012 முதல் 2016 வரை 8.7 சதவீத வட்டியும் கணக்கீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் பாதிக்கபட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையுடன் வட்டியை சேர்த்து நான்கு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணிக்கு எதிர்ப்பு : தில்லியில் ஆர்ப்பாட்டம்

http://media.dinamani.com/2016/04/25/congres.jpg/article3398717.ece/alternates/w620/congres.jpg 
ஏப்.,25.,சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட, தற்போதைய எம்எல்ஏவும் அகில இந்திய மகளிரணி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டச் செயலாளரும், விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்டவருமான கே.அஜி குமார் தலைமையில் தமிழக காங்கிரஸார் சிலர் தில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

இதுகுறித்து அஜி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு கட்சி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் வெறும் 55 நாள்கள் மட்டுமே தொகுதிப் பக்கம் வந்துள்ளார். 

தொகுதி மக்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனில், அவரது உதவியாளரிடம் பணம் அளித்து, மனு அளிக்கக்கூடிய நிலைதான் இருந்து வந்துள்ளது.

விஜயதரணி சென்னையைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகமாகும்.

மேலும், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பெரும் சரிவை ஏற்படுத்தும். எனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவருக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் வரை தில்லியில் எங்களின் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

"எதிர்க்கட்சிகளின் சதி'
விளவங்கோடு தொகுதியில் தனக்குப் பதிலாக வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதில் எதிர்க்கட்சிகளின் சதி உள்ளது என்று விஜயதரணி எம்எல்ஏ தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: விளவங்கோடு தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் அங்கு தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளேன். தொகுதியில் இதுவரை 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.23 கோடியில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளேன். தற்போது என் மீது புகார் சொல்லும் நபர், அதிமுக சார்புடையவர். எனவே, இது எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டுகளாகும். அந்த நபர் மீது கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சித் தலைமை முடிவின்படி நான் திங்கள்கிழமை (ஏப்ரல் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றார் அவர்.

வியாழன், 11 ஜூன், 2015

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அவசியம்: விடுதலை சிறுத்தைகள் நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தல்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி - ஆட்சியதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தரங்கம்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, மதிமுகவைச் சேர்ந்த மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி - ஆட்சியதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தரங்கம்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, மதிமுகவைச் சேர்ந்த மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இன்றைய சூழலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி’ என்னும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடத்தப் பட்டது. கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் பேசிய அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி ஆட்சி கோட்பாட்டை வலியுறுத்தி பேசினார்கள்.

மனிதேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்ஏ. பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக, சுதந்திரா கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாக காயிதே மில்லத் காரணமாக இருந்தார். அப்போது கூட்டணி ஆட்சி என்ற முறையில்தான் அந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற திமுக, கூட்டணி ஆட்சிக்கு மறுத்துவிட்டது. காயிதே மில்லத் மட்டும் அப்போது வலியுறுத்திக் கேட்டிருந்தால் அப்போதே கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் கூட்டணி என்றால் இனிக்கிறது. ஆனால், கூட்டணி ஆட்சி என்றால் கசக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக டெபாசிட் பெறுவதற்கே விடுதலை சிறுத்தைகளும், மமகவும் தான் காரணமாக இருந்தன. ஆனால், நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவினர் சரியாக ஒத்துழைக்கவில்லை. அனைத்து விளிம்பு நிலை சமுதாயத்தினர் மேம்பாடு அடைய கூட்டணி ஆட்சி அவசியம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசியதாவது:

1960-களில் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற கோட்பாட்டினை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். ஏனெனில் அப்போது தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, பொதுவுடைமை கட்சிகள் மட்டுமே இருந்தன. எனவே, அண்ணா அப்படி வலியுறுத்தினார். ஆனால், இப்போது நிலைமை வேறு. அண்ணா மட்டும் இப்போது இருந்திருந்தால் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் கூட்டணி ஆட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்திருப்பார். இன்றைய சூழலில் கூட்டணி ஆட்சிதான் மிகவும் அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி உரையாற்றினர். அவர்களைத் தொடர்ந்து திருமாவளவன் கூட்டணி ஆட்சி குறித்து தலைமை உரையாற்றினார்.

புதன், 10 ஜூன், 2015

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?


1. இன்ஷூரன்ஸ் பாலிசி....யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்

நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்

இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட

வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000

ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப

கட்டணம் செலுத்த வேண்டும்.


கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்

நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்

அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்

தருவார்கள்.

அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்

பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.

இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்;

அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.



2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?


மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.


கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.


தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.


பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.


3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை


எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.


கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும்.


அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:


காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.


5.பான் கார்டு! யாரை அணுகுவது..?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட

ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?


பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.


6.பங்குச் சந்தை ஆவணம்.....! யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்

அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை;

ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.


கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.

சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,

சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.


அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி

புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்? ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும்.

அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?


காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்? ரூ.4,000.


கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள். வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்

துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.

20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

11. கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக

வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Courtesy :விகடன்

சனி, 4 ஏப்ரல், 2015

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விருதுகள் அறிவிப்பு...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகளை அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

2015-ம் ஆண்டுக்கான விருதைப் பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக் கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

அம்பேத்கர் சுடர் எழுத்தாளர் அருந்ததி ராய், அயோத்திதாசர் ஆதவன் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், பெரியார் ஒளி கோவை கு.ராமகிருட்டிணன், காமராசர் கதிர் ஜி.கே.மூப்பனார் ( மறைவுக்குப் பின்னர் வழங்கும் முறையில்), காயிதேமில்லத் பிறை பேராசிரியர் ஜவாஹிருல்லா, செம்மொழி ஞாயிறு முனைவர் அவ்வை நடராசன்

விருது பெறுபவர்களுக்கு பாராட்டுப் பட்டயத்துடன், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னையில் மே 2 -ம் தேதி நடைபெறவுள்ளது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ஒரே நாளில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு...

சென்னை, : போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த 3 பேர் பெட்ரோலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் உள்ளது.

இங்கு அரசு விடுமுறை தினம் தவிர திங்கள் முதல் வெள்ளிவரை புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 12.30 மணி அளவில் தாயும், மகனும் புகார் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

வந்தவர்கள் திடீரென கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள ஈவிகே சம்பத் சாலை நடுவே அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால், அங்கு போக்குவரத்து தடைபட்டது. இதை சற்றும் எதிர்பாராத போலீஸ் கமிஷனர் அலுவலக பாதுகாப்பு பிரிவு போலீசார் இருவரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அவர்கள் கேட்காததால் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் தர்ணாவில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தது மதுரையை சேர்ந்த மகேஷ்வரி, அவரது மகன் இன்ஜினியரிங் மாணவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தனர்.

போலீசாரிடம் மகேஷ்வரி கண்ணீர் மல்க கூறியதாவது: ‘எனக்கு மதுரையில் ரூ5 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் அபகரித்து உள்ளார். என்னையும் மதுரைக்கு செல்ல விடாமல் சென்னை திருமங்கலத்திலேயே சிறை வைத்து இருந்தார். அவரது பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன்.இது குறித்து 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருக்கிறேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சம்பந்தப்பட்ட வக்கீல் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இல்லையேல் தற்கொலை செய்வதுதான் முடிவு என்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மைலாப்பூரை சேர்ந்த மைதிலி என்ற பெண் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பெட்ரோலுடன் வந்தார். வந்தவர் பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து மைதிலி கூறுகையில், “எனது உறவினருக்கு போலீஸ் வேலை வாங்கி தருவதாக அண்ணா சாலை காவல் நிலையத்தில் பணி செய்யும் பெண் போலீஸ் ஒருவர் ரூ7 லட்சம் பெற்றார். உறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். மைதிலி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்து குடித்து நேரடியாக கமிஷனர் அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது. 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.



சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று நேற்று மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 38 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பஸ் மாலை 4.40 மணிக்கு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் வீராசாமிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் டீசலுடன் கலந்து ஏதோ எரியும் புகை வாசம் வந்தது. அந்த பகுதியில் அதிகமான அளவில் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை இருப்பதால், ஆலையில் இருந்து ஏதாவது துர்நாற்றம் வரலாம் என எண்ணி பயணிகள் மூக்கை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

ஆனால், கண்டக்டர் முருகேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிரைவர் குப்புசாமியிடம் தெரிவித்து பஸ்சை நிறுத்த சொன்னார். உடனடியாக பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இருவரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் அருகே உள்ள வயரில் இருந்து தீப்பொறி விழுந்து கரும்புகை வெளியேற தொடங்கியது.

38 பயணிகள் உயிர்தப்பினர்

உடனடியாக பஸ்சில் இருந்த 38 பயணிகள் கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டனர். பயணிகள் அலறி அடித்தபடி வேகமாக உடமைகளுடன் கீழே இறங்கினார்கள். பயணிகள் கீழே இறங்கி கொண்டிருக்கும் வேளையிலேயே பஸ், மளமளவென எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர், தீ எரிவது கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் பஸ் முழுமையாக எரிந்து எலும்புக்கூடு போல ஆனது.

முரண்பட்ட தகவல்

பஸ் தீப்பிடித்ததற்கு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் மறைத்து எடுத்து சென்ற யூ.பி.எஸ். பேட்டரிதான் காரணம் என்றும், அந்த சார்ஜபிள் பேட்டரி உராய்ந்ததால் தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணையை மல்லூர் போலீசார் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக மல்லூர் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பஸ்சின் டீசல் டேங்க் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்ற தகவலின் பேரில்தான் விசாரணை நடத்தி வருகிறோம். எரிந்து நாசமான பஸ்சில் பயணி விட்டு சென்ற யூ.பி.எஸ். பேட்டரி எதையும் நாங்கள் கைப்பற்றவில்லை’’ என்றனர்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

இந்து அமைப்புகளின் எதிர்மறை கருத்துக்களை பிரதமர் மறுத்து தெளிவுபடுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது - கருணாநிதி



இந்திய திருநாட்டை பிற்போக்கு திசைக்கு இழுத்துச்செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவு படுத்த வேண்டிய பிரதமர் நரேந்திரமோடி அமைதி காத்து வருவது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

பதில்:- இலங்கையில் பொறுப்பேற்றிருக்கும் சிறிசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தை சேர்ந்த 62 வயதான கே.ஸ்ரீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப்பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார்.

தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப் பட்டிருக்கும் ஏராளமான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங்கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்களே?

பதில்:- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அந்த இரு பெரும் இமயங்களின் அடியொற்றி லட்சோப லட்சம் செயல் வீரர்களும் பண்படுத்தி, வளர்த்து, பாதுகாத்து வரும் இந்த பூமியிலே தான், அதுவும் பெரியார் வாழ்ந்த திருச்சியிலேதான், இப்படி ஒரு குரல் கேட்டிருக்கிறது. திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் மாநாட்டில், அதன் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா பேசும்போது, “நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். ஒரே நாட்டில் இருவிதமான சட்டங்கள் இருக்கக்கூடாது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட குரல் எழுப்பப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற “இந்துத்துவா” அமைப்புகளைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய மந்திரிகளில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்க வேண்டும்; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்” போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத்கீதையைத்தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங்கப்பட்டு விட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு விடும் என்றும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார்.

அதைப்போலவே, “முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசர நிலை காலத்திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க்கப்பட்டன. இந்த சொற்கள் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டிருக்கிறார்.

அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை “ராம் மகோத்சவம்” நடத்தப்படும் என்றும்; கிராமங்கள் தோறும் இரண்டரை அடி உயரமுள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங்களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

இந்திய திருநாட்டை பிற்போக்கு திசைக்கு இழுத்துச்செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவு படுத்த வேண்டிய பிரதமர் நரேந்திரமோடி அமைதி காத்து வருவது, ஜனநாயகம்-மதச்சார்பின்மை-சமாதானம்-சமதர்மம்-யாரையும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப்பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

திருவரங்கம் இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி நிலைபாடு?



மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது.

இந்த இடைத்தேர்தல் என்பது தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உயர்நிலைக்குழு கருதுவதால், தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ....



சென்னையில் இருந்து 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து புதுமண தம்பதிகளை அனுப்பியவர்கள் அதிர்ச்சி

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. நெல்லூர் அருகே ஜாகலு என்ற இடத்தில் பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், உடனடியாக பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், பேருந்து முழுவதும் தீப்பற்றி நாசமானது.

இந்த பேருந்தில் புதுமண தம்பதிகள் தங்களது சூட்கேசில் கொண்டு சென்ற ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் எரிந்து நாசமானது. மேலும், மாணவர்களின் சிலரது சான்றிதழ்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயம் அடைந்துள்ளார்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து வி.சி கட்சி ஆர்ப்பாட்டம்...


சென்னை, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ராணுவ தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி-இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் தலைமை தாங்கினார். பொருளாளர் மு.முகமது யூசுப், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் எஸ்.எம்.தெஹலான் பாகவி, சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை தலைவர் மேலைநாசர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் எ.எஸ்.இஸ்மாயில் உள்பட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது’
ஆர்ப்பாட்டத்தின்போது, தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கோர தாக்குதலில் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையிலேயே லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை எங்களுக்கு நட்பு நாடு என்று உறவாடிய இந்திய அரசு, தற்போது இஸ்ரேலையும் நட்பு நாடு என்று கூறுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது.
எனவே இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐ.நா.சபையை வலியுறுத்த வேண்டும்.

ஜெயலலிதாவிடம் மன்னிப்பு...
சிங்கள இனவெறி அரசு மிக அநாகரிகமான முறையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி ராணுவ இணையதளத்தில் அவதூறு கருத்துக்களுடன் கேலி சித்திரம் வெளியிட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிப்படையான மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு தொ.திருமாவளவன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, இளைஞரணி துணை செயலாளர் இரா.செல்வம், தனி செயலாளர் மடிப்பாக்கம் வெற்றி செல்வன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் நாட்டு கொடியை தீயிட்டு கொளுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Source - Dailythanthi
#MohamedHaris

அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை...



ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தபோது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தாக்குதலைத் தடுத்து நிறுத்தவில்லை என்று அவர் மீதான கோபம் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது. மாநில முதல்வராக என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுவர்.

இது ஒருபுறமிருக்க, காஸா மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் சகல வாய்ப்புகளையும் கருணாநிதியைவிட அதிகமாகவே சவூதி அரேபிய மன்னரும் எகிப்தின் அதிபரும் பெற்றிருக்கின்றனர்.

கருணாநிதியாவது இலங்கை அரசையும் ராஜபக்சேவையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால், கத்தர் தவிர்த்த அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை

Press- Alagappan Abdul Kareem
#JournalisticviewAbusheikMuhammed

வியாழன், 31 ஜூலை, 2014

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் ஓர் அலசல்!



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஹிந்து சமுதாய மக்களும் முஸ்லிம்களும் தொன்றுதொட்டே தொப்புள்கொடி உறவுகளாக மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்துவரும் சூழ்நிலையில் கடந்த 19 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சங்பரிவார கூட்டங்கள் முஸ்லிம்களையும் அவர்களின் தொழில் நிறுவனங்களையும், சொத்துக்களையும் சூறையாடுவதற்காகவே வேண்டி விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த வாய்ப்பிருந்தும் மேலே சொன்ன காரணங்களுக்காக வேண்டி அமைதியை சீர்குலைக்க ஹிந்து முண்ணனி போன்ற சகத்திகள் முத்துப்பேட்டையில் முயற்சித்து வருகின்றன.

கடந்த 19 வருடங்களாகவே இந்த விநாயகர் ஊர்வலத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் எழுவது வழக்கமாகிவிட்டது எனலாம். அந்தளவிற்கு ஊரவலத்தினரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தே உள்ளன. தமிழகம் முழுவதும் குறிப்பட்ட தினத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்துவிட்டாலும் பெரும்பாலாக பதட்டமான சூழ்நிலைபகுதி என்று கருதும் சில ஊர்களில் மட்டும் ஹிந்து முண்ணனி அறிவிப்பதே ஊர்வலத் தேதியாகும்.

அதில் ஒன்றுதான் முத்துப்பேட்டை. இங்கு குறிப்பிட்ட அந்த தேதியை கடந்து 10 அல்லது 15 தினங்கள் கழித்த பின்னரே நடத்த திட்டமிடுவார்கள் காரணம் இது மத ஊர்வலம் அல்ல மத கலவரம் என்பதை உணர்ந்துகொண்ட உள்ளூர் ஹிந்துக்கள் பெரும்பாலானோர் இந்த ஊர்வலத்தில் பங்குகொள்வதில்லை.

 அதன் காரணமாக இவர்கள் வெளியூரிலிருந்து ஆட்களை திரட்டி வருவதற்காகவே இந்த நாள் கடந்த அறிவிப்பாக இருக்கும். அப்படி ஊர்வலத்தில் வரும் வெளியூர்வாசிகள் உன்மை “குடிமகன்”களாக ஊர்வலத்தில் பங்கெடுப்பர் அதன் வெளிப்பாட்டை ஊர்வலத்தின் பகுதிகளில் காணலாம்.

ஊர்வல தேதி அறிவித்தபிறகு ஏதோ ஒருவகையான பதற்றம் முத்துப்பேட்டையில் ஊர்வலம் நடந்து முடியும் வரை காணப்படும் அதோடு மட்டுமல்ல அந்த ஊர்வலத்தில் ஏதேனும் சலசலப்புகளை ஊர்வலக்காரர்கள் ஏற்படுத்திவிட்டால் அந்த பதற்றம் சில நாட்களுக்கு தொடர்வதும் வழக்கம் தான்.

காவல்துறையும் அதிக கவனம் எடுத்து பல்வேறு அமைதி நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டாலும் சில நேரங்களில் அசம்பாவதிங்களும் நடந்துவிடுகின்றன. தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே திருச்சி ஐஜி தலைமையில் 4 அல்லது 5 மாவட்ட எஸ்.பிக்கள் 15 அல்லது 20 க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி கள் இன்னும் ஏ.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என அதிகபட்சாமான காவலர்களை பாதுகாப்புக்கு பயன்படுத்துவார்கள்.

 அதோடு வஜ்ரா வாகனங்கள், போக்குவரத்தை சரி செய்யப்பயன்படுத்தப்படும் தட்டிகளை கொண்டுவந்து ஊர்வாலப்பாதைக்குட்டபட்ட அனைத்து சந்துகளையும் அடைத்தல், ஊர் முழுவதும் அதி நவீன கேமராக்களை கொண்டு கண்கானித்தல் என முத்துப்பேட்டையே காவல்துறையின் முழுகட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்படும். முத்துப்பேட்டை மக்கள் அதுவும் குறிப்பாக முஸ்லிம்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் இருப்பது போன்ற நடவடிக்கைகள் அமையும்.

ஊர்வல தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பாரையும் தனி தனியே அழைக்கப்பட்டு அமைதிக்கூட்டம் எனவும், காவல்துறை கண்காணிப்பாளர், துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் பி.ஸி மீட்டிங் எனவும் கூட்டப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் விளக்கப்பட்டு அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படும்.

காவல்துறை இத்தனை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் ஊர்வலக்காரர்கள் தேவையில்லாமல் எழுதிகொடுக்கப்பட்டவைகளுக்கு மாறாக கோஷங்களை எழுப்புவது, நேரம் கடந்து ஊர்வலத்தை முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் கொண்டுவருவது, ஊர்வலப்பாதையில் உள்ள முஸ்லிம்கள் வீடுகளை கல் எறிந்துதாக்குவது என ஊர்வலக்காரர்களின் அட்டகாஷத்திற்கு எல்லையே இல்லாமல் இருக்கும். காவல்துறையும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற செயல்களை வேண்டுமெனே செய்வார்கள் ஊர்வலக்காரர்கள். இது தொடர்ந்து பதற்றத்தையே உருவாக்கி வந்தன.

முத்துப்பேட்டை முஸ்லிம்களின் பகுதிக்குள் அமைதியான முறையில் எத்துனையோ மத ஊர்வலங்கள் வந்தாலும் இந்த விநாயகர் ஊர்வலத்தால் எழும் பிரச்சனைகளை காரணமாக கொண்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் விசாரனை நடத்தி முன்பு இருந்த ஊர்வலப்பாதையான புதுப்பள்ளிவாசல் ரோடு, பங்களாவாசல், பெரியகடைத்தெரு, வழியாக முகைதீன் பள்ளி, குட்டியார் பள்ளி, அரபு சாகிபு பள்ளி என பல வழிபாட்டுதளங்களையும், முஸ்லிம்களின் தெருக்களையும் தாண்டி பேட்டையில் கறைத்து வந்ததை மாற்றி அமைத்து புதுப்பள்ளிவாசல் வழியை கடந்து பட்டுக்கோட்டை ரோடு வழியாக கோரையாற்றில் கரைக்கவேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அந்த நீதிமன்ற அறிவுப்புக்குப்பின் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கடந்த 3 வருடங்களாக ஊர்வலப்பாதை மாற்றி அமைக்கப்பட்டு ஊர்வலம் சென்றுவருகிறது. ஊர்வலப்பாதை மெயின் வழியாக இருந்தாலும் அதிலும் சிலப்பகுதிகள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளாகவே இருப்பதால் இந்த பகுதிகளுக்குள் ஊர்வலம் வந்தவுடனே கோஷங்களும்.

தேவையில்லாத சப்தங்களும் அதிகரிக்கப்பட்டுக்கொண்டே ஊர்வலம் செல்லும் அவ்வாறே கடந்த வருடம் செல்லும் போது ஊர்வலப்பாதையில் அமைந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்லத்தின் கண்ணாடிகள் கற்களை கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன. அதே வழியில் தொடர்ந்து சென்ற ஊர்வலம் ரஹ்மத் பள்ளிக்கூடத்தையும், ரஹ்மத் பள்ளிவாசலையும் கற்களால் தாக்கியுள்ளது. ஆனாலும் முஸ்லிம்கள் அமைதிகாத்தே வந்தனர்.

ஊர்வலம் கரைக்கும் பகுதிக்கு சென்று விநாயகர்களை கரைத்தவுடன் திரும்பும்போது சில வருடம் பிரச்சனை வந்துவிட்டதால் உசாரான காவல்துறை கடந்த பல வருடங்களாகவே தங்களது வாகனங்கள் மூலமாகவும் தனியார் வாகனங்கள் மூலமாகவும் ஊர்வலக்காரர்களை அனுப்பி வைத்துவருகின்றனர். இப்படி காவல்துறையின் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.

அந்த வரிசையில் 20 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் 28-09-2012 அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையும் வழக்கத்தைவிட அதிகமாகவே பாதுக்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 3000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பெண் காவலர்கள் உள்பட பணியில் அமர்த்தப்பட்டனர். நிறந்தர கேமாராக்கள் (பிரச்சனைகள் அதிகமானதால் முத்துப்பேட்டை முழுவதும் நிறந்தரமாக நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டு ஊர் கண்கானிக்கப்பட்டுவருகிறது) அல்லாது அதி நவீன கேமராக்கள் ஆங்காங்க தற்காலிகமாக பொறுத்தப்பட்டன.

முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கு பாதுகாப்புகள் வழங்கப்பட்டன. வஜ்ரா வாகனங்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து தட்டிகளுடன் இந்த வருடம் கூடுதலாக பெரிய மரங்களை கொண்டு ஆட்டோ ஸ்டான்டும், செக்கடிக்குள பகுதியும் தட்டிகளாக மறைக்கப்பட்டன. அடிக்கு இரண்டு போலிஸ் என்கிற அளவிற்கு முத்துப்பேட்டை முழுவதும் வெறும் போலிஸ்காரர்களாகவும், போலிஸ் வாகனங்களாகவும்தான் சில நாட்கள் முத்துப்பேட்டை காட்சி தந்தன. பல்வேறு அமைதி கூட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாற்றமாக பேட்டை எனும் பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட முஸ்லிம்களின் பகுதிகளுக்கள் கொண்டுவந்து பங்களாவாசலில் வழக்கமான விநாயகர் ஊர்வலத்தோடு இணைவது என்று திட்டம்போட்டு விநாயகர் சிலைகள் அனுமதி பெறாமல் பேட்டையில் வைத்திருந்தனர் ஹிந்து முண்ணனி பா.ஜ.கவினர். இதனை அறிந்த காவல்துறையினர் ஊர்வலம் நடப்பதற்கு 2 மூன்று நாட்களுக்கு முன்பாகவே பேட்டைக்கு சென்று அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு தூக்கிவந்தனர். இதனால் பேட்டை பகுதி பா.ஜ.கவினர் சிலர் மட்டும் உண்ணாவிரதம் என்று நாடகம் நடத்தி பார்த்தனர் இதை உள்ளூர் பேட்டை வாசிகளே புறக்கணித்து அவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டனர். எதற்கும் அசைந்துகொடுக்காத காவல்துறை அவர்களின் சூழ்ச்சியை தவிடு பொடியாக்கியது.

ஊர்வல தேதியான 28-09-2012 முத்துப்பேட்டையே டென்ஷனாக இருந்தது எனலாம் அந்தளவிற்கு அமைந்திருந்தது. முத்துப்பேட்டை ஜாம்புவனோடை வடகாட்டில் இருந்து ஹிந்து முண்ணனியின் சார்பாக மேல தாளங்களுடனும், வெடி சப்தங்களுடனும் பெரிய விநாயகர் சிலை புறப்பட்டது. ஜாம்புவனோடை பெரிய தர்ஹா வழியாக வந்த விநாயகர் ஆவேச கோஷங்களுடன் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பாலத்தையைடைந்து ஆசாத்நகர் வழியாக பஸ்டான்டிற்கு வருகை தந்தது.

அவ்வாறு அந்த ஊர்வலம் வருவதற்கு முன்பாகவே செம்படவான் காடு, ஆலங்காடு, கோஷாக்குளக்கரை, மருந்தாங்காவெளி, காளியம்மன் கோவில் தெரு என அந்தந்தப்பகுதிகளில் இருந்தும் அமைக்கப்பட்ட விநாயகர்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மீராஹூசைன் ஆஸ்பத்திரி அருகில் வந்தடைந்து மேலதாளங்களோடு வழக்கம்போலவே காத்திருந்து. ஜாம்புவனோடையில் இருந்து புறப்பட்ட பெரிய விநாயகரோடு இத்தனை பகுதிகளின் விநாயகர்களும் இணைந்துகொண்டு ஊர்வலமாக பழைய பஸ்டான்டிற்கு வழக்கம்போலவே வருகை தந்தது. அங்கு சுமார் அரைமணிநேரம் ஊர்வலம் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் புதுபள்ளிவாசல் பகுதியான நியூ பஜார் வழியாக சரிபா வாய்ஸ் டேனிங்கை அடைந்து பங்களாவாசல் வழியாகவும், ரஹ்மத் ஸ்கூல் வழியாகவும் கோரையாற்றை சென்றடைந்து அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தின் போது எந்த விதமான அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றாலும் மருந்தாங்கவெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட வெடிகளால் மன்னை சாலையில் உள்ள காவல்நிலையம் அருகில் உள்ள கடைகளில் பட்டு சிறிய அளவில் தீ ஏற்பட்டது. உடனடியாக தயார்நிலையில் இருந்த மன்னார்குடி, திருத்திறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ பரவாமல் தடுக்கபட்டன. இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source-Muthuppettai Mohaideen
#Mohamedharis

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...



தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...
சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ
மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...

ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..

Source- dinakaran daily newspaper
#Mohamedharis

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்