அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.
மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைபள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அகமது நாசா அமைப்பின் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை விரும்பி அணிபவர். புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டவர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார்.
இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு சின்ன சூட்கேசில் இருந்த அந்த அமைப்பை பார்த்ததும் பள்ளி ஆசிரியருக்கு சந்தேகம் தான் உண்டானது. இதற்குள் இன்னொரு ஆசிரியர் இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் வெடிகுண்டாக இருக்கலாம் எனும் சந்தேகமே இதற்கு காரணம். நிச்சயமாக இந்த சந்தேகத்தின் பின்னே அகமதுவின் பெயரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
அகம்து அவரது இஸ்லாமிய மத பின்னணி காரணமாகவே இந்த சந்தேகத்திற்கு இலக்காகி இருக்கிறார் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மத்த்தை சேர்ந்த எல்லோரையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் தட்டையான மனநிலையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்தனர்.
இந்த கைது பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி ,அமெரிக்காவில் நிலவும் சார்பு நிலை பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியது.

நடந்த சம்பவம் மாணவர் அகமதுவிற்கு அதர்சியாக இருந்திருக்கும். அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தனர்.
ஆனால் இதற்குள் அகமதுவுக்கு ஆதரவு குவியத்துவங்கியது.இணையத்தில் பலரும் அகமதுவுக்கு நேர்ந்த கதி குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவனின் ஆர்வத்தை பார்க்காமல் அவனது மத பின்னணியில் கவனம் செலுத்து சந்தேக்கிக்கும் போக்கை பலரும் கடுமையாக குறை கூறினர். இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இளம் கண்டுபிடிப்பாளராக அகமதுவை ஊக்குவிப்பதற்கு பதில் ஒரு பள்ளி மாணவரை தீவிரவாதியாக பார்ப்பது சரியா எனும் விதமாக பலரும் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் அல்லவா என்பது போலவும் சிலர் ஆவேசமாக கேட்டிருந்தனர்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் இப்படி ஆதரவு குவிந்த நிலையில். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் , அகமதுவின் கடிகார கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளதோடு வெள்ளை மாளிகைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு பெருகி வருகிறது.
இப்படி பெருகும் ஆதரவு மாணவர் அகமதுவை ஹிரோவாக்கி இருக்கிறது. நிச்சயம் இந்த ஆதரவையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இணையம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து புகழையும் தேடித்தந்திருக்கிறது.