சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார் தரலாம் என, விசாரணை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார். கலவரம், வன்முறை மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்திய பின் அந்த அறிக்கயைானது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பின் அரசிடம் சமர்பிக்கப்படும் என்றார். இன்று சென்னை மெரினா மற்றும் அதனை சுற்றி வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியதளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, அலங்காநல்லூர் பகுதிகளிலும் விசாரணை நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். வன்முறை மற்றும் காவல்துறை அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள விசாரணை கமிஷன் அலுவலகத்தில் புகார் தரலாம் என்றார். புகார் தருவது எப்போது என்று பத்திரிக்கையில் வெளியிடப்படும் என கூறினார். நடந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என்றார்.
முன்னதாக ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாபெரும் தன்னெழுச்சி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் இறுதியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறி காவல்துறைியனர் நடத்திய தடியடியால் வன்முறை வெடித்தது. இதில் மெரினாவை சுற்றியுள்ள நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் பகுதிகள் காவல்துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதனையடுத்து இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை இன்று துவங்கியது. மெரினா கடற்கரை அருகேயுள்ள விவேகானந்தர் இல்லம் பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நீதிபதி ராஜேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தினார். மீன்சந்தை பகுதிகளில் மீனவர்களிடம் வன்முறை தொடர்பாகவும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு நடத்தினார்.