சஹாரா தமிழ்: மமக அறிக்கைகள்

ads

மமக அறிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மமக அறிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் அறிக்கை...


               
                  அந்தச் செய்தி ஒரு கெட்ட கனவாக இருந்திருக்கக்கூடாதா? என நாடே துடித்தது. மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்ற துயர செய்தி உறுதியான போது, தனது வீட்டில் ஒருவர் இறந்துவிட்டது போன்ற சோகத்தில் ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் கலங்கியது என்றால் அதுமிகையில்லை. அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடாதா? என ஒவ்வொரு இந்தியனின் இதயமும் துடிக்கிறது.

எப்போதும் நாட்டைப்பற்றிய கவலை, தொலைநோக்குச் சிந்தனைகள், சலிப்பற்ற உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்த முன்னோக்குப் பார்வை, ஏழைகளின் மீதான அக்கறை, குழந்தைகள் மீதான பரிவுடன் கூடிய ஈடுபாடு, மாணவர் சமுதாயத்தின் மீதான நம்பிக்கை என அவரது நடவடிக்கைகள் அவரை “மக்களின் ஜனாதிபதியாக” நாட்டு மக்களின் இதயத்தில் குடி அமர்த்தியது.

துடிப்பான இந்தியாவை உருவாக்கி, நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் கனவு கண்டதோடு மட்டுமின்றி அந்தக் கனவை நோக்கி இளைய தலைமுறையை வழிநடத்தினார். அவரது எழுத்துக்களும், உரைகளும், நாளைய தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடியதாகும். அவர் ஏவுகணை தொழில்நுட்பத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் காட்டிய அதே ஆர்வத்தை கிராமப்புற வளர்ச்சியிலும் காட்டினார். அது அவரது மனிதநேயத்தைப் பறைசாற்றுகிறது.

அனைத்துத் துறைகளையும் குறித்த ஆழமான அறிவும், அன்றாட உலகின் முன்னேற்றங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆர்வமும் அவரை துடிப்பானத் தலைவராக உலகிற்கு காட்டியது. அவரது வருகையை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைக்காக பல நாட்டு பல்கலைக்கழங்கள் காத்திருந்தன.

வாழ்நாள் முழுக்க மாணவர்களை சந்திப்பதிலேயே ஆர்வம் காட்டிய அவரது வாழ்க்கை கடைசியில் ஒரு மாணவர் சந்திப்பிலேயே நிறைவு பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.
அறிவியல், அரசியல், அரசு நிர்வாகம், சமூகசேவை ஆகியவற்றோடு இலக்கியத்திலும் அவர் காட்டிய ஆர்வம் சிறப்பானது. தமிழின் மீது தனியாத தாகம் கொண்ட அவர் தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதினார்.

தனது இறைநம்பிக்கைக் குறித்தும், அன்றாட தொழுகை குறித்தும் தம்பட்டம் அடித்ததில்லை. அவர் எல்லோரின் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், மதித்தார். அனைத்து இந்தியர்களையும் தமது சகோதர, சகோதரிகளாக பாவித்தார். இவை எல்லாம் அவரது சிறப்புகளில் முக்கியமானதாகும்.

காந்தி மற்றும் நேருவிற்குப் பிறகு அனைத்து இந்தியர்களாலும் போற்றப்பட்டு, சர்வதேசத்தால் அங்கீரிக்கப்பட்ட ஒரே தலைவர் அப்துல் கலாம் தான் என்றால் அது மிகையில்லை. அவர் பன்முக ஆளுமைத் திறன் கொண்டவராக இருந்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் அறிவுஜீவியாக உலக அரங்கில் மதிக்கப்பட்டார்.

தன் புகழிலும், பொது வாழ்விலும் குடும்பத்தினரை அண்டவிடாத; கரைப்படியாத நேர்மையாளரான அவர் ஒரு முன்மாதிரி இந்தியராக வாழ்ந்து சென்றிருக்கிறார்.
இன்று அப்துல் கலாமின் உழைப்பும், சிந்திப்பும் முற்று பெற்றுவிட்டது. இந்த நாட்டுக்காகவே துடித்த அவரது இதயம் தன் துடிப்பை நிறுத்தியிருக்கிறது. மரணம் என்பது வாழ்க்கைக்குத் தானே தவிர வரலாற்றிற்கு அல்ல. அந்த மனிதநேயரை இந்திய வரலாறு தன் வைர வரிகளால் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை. அவருக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

வியாழன், 29 ஜனவரி, 2015

திருவரங்கம் இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி நிலைபாடு?



மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது.

இந்த இடைத்தேர்தல் என்பது தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உயர்நிலைக்குழு கருதுவதால், தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

ஞாயிறு, 18 மே, 2014

200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது - எம். தமிமுன் அன்சாரி


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் பணநாயகம் வென்றிருக்கிறது. 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது.

சூறைக் காற்றில் சந்தன மரங்களும் சாய்வதைப் போல, மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. எமது தியாகமிக்க பயணத்தில் எவ்வளவோ சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றிலிருந்து வெகு விரைவிலேயே மீண்டிருக்கிறோம்.

இந்த தோல்வி எங்களை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால், களத்திலிருந்து அகற்றி விடாது. காரணம், நாங்கள் லட்சியத்திற்காகவும், கொள்கைகளுக்காகவும் களமாடுபவர்கள். எங்களை மெழுகுவர்த்திகளாக உருக்கிக் கொண்டு பணியாற்றுவதில் எப்போதுமே திருப்தியடைபவர்களாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் உயரிய லட்சியங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தோல்வி குறித்து முழுமையாக ஆராய்வோம்.

மயிலாடுதுறையில் எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை என்ற அடிப்படையில் இதனை ஏற்றுக் கொள்கிறோம்.

- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

சனி, 11 ஜனவரி, 2014

நாடாளுமன்றத் தேர்தல் : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு...



சென்னை,ஜனவரி.10 : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு தெரிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம், நேற்று காலை, எழும்பூர் சிங்கப்பூர் பிலாசாவில் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளி, 19 ஜூலை, 2013

இலங்கை சிறையில் உள்ள 11 தமிழர்களை இந்தியாவிற்கு கொண்டு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மமக கோரிக்கை















மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

  2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தண்டிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்துக் கொள்ளும் உடன்பாடு கையொப்பமாகியது. இந்த உடன்பாட்டின்படி இந்திய சிறைகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தண்டனைப் பெற்ற கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு எஞ்சிய தண்டனைக் காலத்தை அங்கு கழிப்பதற்கும் இதே போல் இலங்கை சிறையில் உள்ள தண்டனைப் பெற்ற இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு நம் நாட்டு சிறையில் எஞ்சிய தண்டனைக் காலத்தை கழிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.

இந்த உடன்பாட்டின்  அடிப்படையில் கடந்த மார்ச் 2013ல்  இலங்கை சிறையில் இருந்த 20 இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர இன்னும் 11 தமிழக கைதிகள் இன்னும் இலங்கையில் உள்ள வெளிகடா சிறையில் உள்ளனர்.

  உடன்பாட்டின் படி இவர்களை இந்தியா அனுப்புவதற்கான நடைமுறைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் தமிழக அரசின் உள்துறை இலாகாவும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கைதிகளை அடையாளம் காண்பது  அவர்களை இந்திய அனுப்புவதற்கான பயண ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்துவிட்டது.
ஆனால் தமிழக அரசின் உள்துறையில் இவர்கள் தொடர்பான கோப்புகள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளதால் இந்த 11 தமிழக கைதிகளும் நாட்டிற்கு திரும்ப வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உடனடியாக இந்த 11 தமிழர்களும் நாட்டிற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கைதிகளில் அதிகமானோர் 60 வயதை தாண்டிய நோயாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
எம் எச் ஜவஹிருல்லாஹ்

புதன், 6 மார்ச், 2013

தமிழக அரசே பந்த் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/03/MMK-flag-1.jpg

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு கொடூரமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் ஒன்றுபட்ட நிலையில், ஐ.நா. பெருமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்க வேண்டும் என தமிழகமே போராடி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த 1983ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களும், தமிழகத்தில் ரயில்களும் ஓடாதவாறு செய்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் மறைமுக ஆதரவளித்தார்.

அதேபோன்று, தமிழக முதல்வர் அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழகம் தழுவிய கடையடைப்பு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள், கடந்த 3.3.2013 அன்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியின் போது கோரிக்கை விடுத்தார்.

ஆகவே, அனைத்துலக தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழக அரசே கடையடைப்பு நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அன்புடன்
(பி.எம்.ஆர்.சம்சுதீன்)

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/09/MMK.jpg

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி:

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும்.

சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய ஒருசில தலைவர்களில் அவர் முதன்மையானவர். இந்தியா போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவைப் பராமரித்தவர்.
உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் நாடுகள் பலவீனம் அடைந்திருக்கும் நிலையில் வெனிசுலாவை வலிமைமிக்க நாடாக மாற்றிக் காட்டியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், மறக்க முடியாத உலகத் தலைவர்களின் வரலாற்றில் அவர் இடம்பெறுவது உறுதியாகும். அவரது மறைவால் வாடும் இடதுசாரி தோழர்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

வியாழன், 17 ஜனவரி, 2013

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgInBMBhJjIen_thPNeD1olM4_JvhC05sIkUVv4ybl0WmzB2NmnrAnvhZU48TlXgSavzCjn-iT0NDmYpeHFi5wcJecX1IIkAjZejBeYggXzviU4d-2Oh58Rl_eiouvWhu803r4Bikx2VWk/s320/JSR+photo-757300.JPG
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

மானியமாக வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9ஆக உயர்த்திய மத்திய அரசை மனிதநேய மக்கள் கட்சி மனமாரப் பாராட்டுகிறது. இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த செப்டம்பர் மாதம், மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை 6ஆக குறைத்தும், செப்டம்பர் 2012 முதல் மார்ச் 2013 வரையிலான எண்ணிக்கையை 3ஆக குறைத்தும் மத்திய அரசு எடுத்த முடிவு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனக் கூறி மக்கள் நல விரும்பிகள் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருந்தது. கடந்த மாதம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் துன்பங்களையும், எதிர்ப்புகளையும் நேரடியாக அறிந்து கொண்டது.

இப்போது மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9 ஆகவும், செப்டம்பர் 2012 முதல் மார்ச் 2013 வரையிலான எண்ணிக்கையை 3ல் இருந்து 5 ஆகவும் உயர்த்தி பிராயச்சித்தம் தேடியுள்ளது. தாமதமான முடிவு என்றாலும் இது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், பெட்ரோலைப் போலவே டீசல் விலையை நிர்ணயிக்கும் முடிவை எண்ணெய் நிறுவனங்களே எடுக்கலாம் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. டீசல் விலை உயர்ந்தால் நாட்டில் அனைத்து உபயோகப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

வியாழன், 5 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களுக்கான பயிற்சியைக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcS1ETkipn_lL7cEtI8hL2qwDY7gzAMfHmks-v4CG9LsdASNF-jWமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை:



இலங்கை விமானப்படை வீரர்களுக்கு இந்திய அரசு தமிழகத்தில் பயிற்சி அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்செய்தி உண்மையாக இருப்பின், இப்பயிற்சியை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த பாசிச அரசாங்கம் தொடர்ந்து அதே கொள்கையில் உறுதியாக இருக்கும் நிலையில் அவர்களின் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதும், உதவுவதும் உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.

எதற்கெடுத்தாலும் சீனாவைக் காரணம் காட்டி இந்திய அரசு இலங்கைக்கு உதவுவது என்பது ராஜதந்திரமல்ல. இந்திய அரசின் தெளிவற்ற வெளியுறவுத்துறை கொள்கைகளால் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை தொடர்ந்து நசுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக மக்களின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என வேண்டுகிறோம்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

வியாழன், 12 ஏப்ரல், 2012

உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது மமக!


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTnSCJmfYikdRGMETnRPbB4BJLPL1u1bqOnhTIoM5V2XlOiC53yYd2yiJWJ 
ஐந்தாயிரம் இடங்களில் மமக கொடிக்கம்பங்கள்!

மாணவர்களை அணிதிரட்ட "மாணவர் இந்தியா" உதயம்!

மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள நிலையில், கட்சியை மேலும் வலுப்படுத்திடவும், பரவலான ஆதரவை உருவாக்கிடவும் புதிய செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமுதாயத்தையும் தாண்டி பிற சமூக மக்களையும் கவரும் வகையில் ஏற்கனவே மாநிலப் பொறுப்புகளில் மூன்று பொறுப்புகள் பிற்படுத்தப்பட்டவருக்கு, தலித்துக்கு, கிறித்தவருக்கு என அறிவிக்கப்பட்டு தகுதியான வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கட்சியின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் செயல்திட்டங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழுவில் வகுக்கப்பட்டி ருக்கிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஐந்தாயிரம் இடங்களில் மமக நிர்வாகிகளை முன்னிறுத்தி மமகவின் கொடியேற்று நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும், அதையொட்டி கட்சிக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், கொடியேற்று நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை வரைவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக மமக சார்பில் மாவட்ட மாநாடுகளும் நடைபெற உள்ளன. அதுபோல, காலத்தின் தேவைகளாக மமகவின் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்படுகின்றன. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள உறுப்பினர் படிவத்துக்கு மாற்றாக, எளிமைப்படுத்தப்பட்ட புதிய உறுப்பினர் படிவம் தயாரிக்கப்படுகிறது.

இளைய தலைமுறையிடம் கட்சியின் களத்தை விரிவுபடுத்தும் வகையில் இளைஞர் அணியை வலுப்படுத்துவது என்றும், மாணவர்களை அணிதிரட்டும் வகையில் ‘மாணவர் இந்தியா’ என்ற துணை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மமகவின் மாணவர் அணியாக செயலாற்றும்.

முற்போக்கு சிந்தனை, ஒழுக்கம், பண்பாடு, சமூக அக்கறை, தேசநலன், சர்வதேச அரசியல் அறிவு கொண்ட மாணவர்களை உருவாக்கும் அறிவுசார் படையாக மாணவர் இந்தியா கட்டியமைக்கப்படும். இதில் ஒத்தக்கருத்துடைய அனைத்து சமூக மாணவர்களும் இணைக்கப்படுவார்கள். இந்த அமைப்பு கல்வி விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிரானப் பிரச்சாரம் மற்றும் அரசியல் போராட்டங்களை பிரதானப் பணிக ளாகக் கொண்டிருக்கும். இவை தவிர பேச்சாளர் பயிற்சி முகாம்கள், அரசியல் பயிற்சி முகாம்கள் என மமகவின் பணிகள் தொடர்ச்சியாக வலிமைப்படுத்தப்பட உள்ளன.

கொந்தளிப்பான கடல்தான் மிகச்சிறந்த மாலுமிகளை உருவாக்கும். நெருக்கடிகளும், சூழ்நிலைகளுமே சிறந்த களப்பணியாளர்களை வென்றெடுக்கும்!



www.Tmmk.in

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் - மமக போராட்டங்களை முன்னெடுக்கும்


 

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை...

தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்து மற்றொரு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே பால் விலை மற்றும் பேரூந்து கட்டண உயர்வாலும் மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மின்சாரகட்டணம் 37% உயரும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. 

இதற்கு மின்சார வாரியம் நட்டத்தில் ஓடுவதாகவும், அதை லாபத்தில் மாற்றவே இந்த முடிவு என கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியபோது கடும் எதிர்ப்பை சந்தித்தனர்.

ஒரு அரசு என்பது லாபநோக்கில் மட்டுமே செயல்படக்கூடாது. மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மின் திருட்டை ஒழிப்பதன் மூலமும், நிர்வாகத்தை சீர்செய்வதன் மூலமும் நஷ்டத்தை ஓரளவு சமாளிக்க முடியும்.

கட்டண உயர்வு என்பது ஒரு அளவோடு இருந்தால் கூட சகிக்க முடியும். பால், பேருந்து கட்டண உயர்வைப் போலவே இதுவும் ஒரு அநியாயயே விலை உயர்வாக இருக்கிறது.

37% விலை உயர்வு என்று கூறினாலும், தனித்தனியே கணக்கிட்டால் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மக்களுக்கு கட்டண உயர்வு 50 சதவீதத்தை தாண்டுகிறது.

ஏற்கனவே 8 மணிநேரம், 10 மணிநேரம் என மக்கள் மின்சாரமின்றி தவிர்க்கிறார்கள். இந்நிலையில் அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளக்கூடாது.

இக்கட்டண உயர்வு மக்களை நேரிடையாக கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளதால் தமிழகஅரசு இக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இக்கட்டண உயர்வுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்