இந்தியாவில் அரசியல் கட்சிகள் நடந்தும் போராட்டங்கள் பொதுமக்களை பல்வேறு வகைகளில் பாதிப்படைய செய்துவிடுகின்றன. அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது கடந்த 22-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி நடத்திய முழு அடைப்புப் போராட்டம்.
சியாமளா. புதுச்சேரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த வாரம் வரை ஆரோக்கியத்துடனும் தழும்புகள் இல்லாத அழகு முகத்துடனும் இருந்தார். சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரியும் இவர், கடந்த திங்கள் கிழமை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
அன்றைய தினம் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது பாரதிய ஜனதா கட்சி. சியாமளா வந்துகொண்டிருந்த பேருந்து மீது யாரோ கல் எறிய, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் கண்ணாடி குத்தியது. அதில் நிலைகுலைந்துபோனார் சியாமளா. மருத்துவமனைக்கு நேற்று நேரில் வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் விரேந்திர கட்டாரியா, சியாமளாவையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். சியமளாவின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.
சியாமளாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள். மேலும், சியாமளாவின் முகம் பழைய நிலைக்குத் திரும்ப தொடர் சிகிச்சைத் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சியாமளாவிற்கு நேர்ந்த துயரத்தை எண்ணி கண்கலங்குகின்றனர் அவரது உறவினர்கள். கல் எறிந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். காயம்பட்ட இளம்பெண்ணோ துடித்துக்கொண்டிருக்கிறார்.