2004ஆம் ஆண்டில் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் நிகழ்ந்த விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பள்ளித் தாளாளர் பழனிச்சாமி, அவர் மனைவி சரஸ்வதி, மகள் ஷாந்த லெட்சுமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியின் மேல்மாடியில் இருந்த வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அந்த அறையில் குழந்தைகள் தீயில் சிக்கிக் கொண்டன. இதில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் 24 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விடுதலை பெற்றனர்.
10 வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
Source-BBC Tamil
புதன், 30 ஜூலை, 2014
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: 10 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு
12:07 PM
தமிழக செய்திகள், Tamilnadu