சென்னை, கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் மளமளவென்று அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதுவரை 670 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த நோய்த் தொற்று கண்ட ஒரு பயணி நைஜீரியாவிற்கு பயணம் செய்தபோது அங்கு இறந்ததால் அங்கும் இதன் பாதிப்பு தொடரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் குணமாவதற்கான சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லை என்ற தகவலுடன் இந்த நோய்த்தாக்கத்தின் இறப்புவாய்ப்பு 90 சதவிகிதம் என்பதுவும் இதன் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்திறங்கும் பயணிகளுக்கு இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை விமான நிலைய சுகாதார அமைப்பும், அரசு நிர்வாகமும் முடிவு செய்துள்ளன.
எபோலா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கோ மற்ற இந்திய நகரங்களுக்கோ நேரடியான விமான சேவைகள் இல்லை.ஆனால் அந்த நாடுகளில் இருந்து அரபு நாடுகளுக்கு வரும் பயணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு சென்னையிலிருந்து செல்லும் இணைப்பு விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதுபோல் அதிக அளவிலான நைஜீரியர்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சில பயணிகள் சென்னை வருகின்றனர் என்று குறிப்பிட்ட விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவ்வாறு வரும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Source - Maalaimalar
#MohamedHaris
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
எபோலா நோய்: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை சோதனையிட முடிவு
இன்றைய சித்திரம்
