கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணிக்கு எதிர்ப்பு : தில்லியில் ஆர்ப்பாட்டம் ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 25 ஏப்ரல், 2016

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணிக்கு எதிர்ப்பு : தில்லியில் ஆர்ப்பாட்டம்

http://media.dinamani.com/2016/04/25/congres.jpg/article3398717.ece/alternates/w620/congres.jpg 
ஏப்.,25.,சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட, தற்போதைய எம்எல்ஏவும் அகில இந்திய மகளிரணி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டச் செயலாளரும், விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்டவருமான கே.அஜி குமார் தலைமையில் தமிழக காங்கிரஸார் சிலர் தில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

இதுகுறித்து அஜி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு கட்சி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் வெறும் 55 நாள்கள் மட்டுமே தொகுதிப் பக்கம் வந்துள்ளார். 

தொகுதி மக்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனில், அவரது உதவியாளரிடம் பணம் அளித்து, மனு அளிக்கக்கூடிய நிலைதான் இருந்து வந்துள்ளது.

விஜயதரணி சென்னையைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகமாகும்.

மேலும், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பெரும் சரிவை ஏற்படுத்தும். எனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவருக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் வரை தில்லியில் எங்களின் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

"எதிர்க்கட்சிகளின் சதி'
விளவங்கோடு தொகுதியில் தனக்குப் பதிலாக வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதில் எதிர்க்கட்சிகளின் சதி உள்ளது என்று விஜயதரணி எம்எல்ஏ தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: விளவங்கோடு தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் அங்கு தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளேன். தொகுதியில் இதுவரை 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.23 கோடியில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளேன். தற்போது என் மீது புகார் சொல்லும் நபர், அதிமுக சார்புடையவர். எனவே, இது எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டுகளாகும். அந்த நபர் மீது கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சித் தலைமை முடிவின்படி நான் திங்கள்கிழமை (ஏப்ரல் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றார் அவர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்