வேலூர்.செப்.24., மே17- இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் ஐ.நா சபையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகப் பேசினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம் வந்த அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர், அவர் சென்னை கொண்டுவரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இதன் பின்னர், தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவர் மீது #தேச_விரோத நடவடிக்கை தடுப்பு பிரிவின் (#UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றம் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட உபா சட்டத்தை ரத்து செய்தது.
45 நாள்களாகத் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில்கூட சிறையில் இருக்கும் மற்றவர்களைச் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மே 17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் திருமுருகன் காந்திக்கு நேற்றுமுன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், தனக்கு மருத்துவ பரிசோதனை தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் போலீஸார் தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று திருமுருகன் காந்தி உடல் நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், இது தொடர்பாகத் திருமுருகன் காந்தியின் உறவினர்களுக்கோ அல்லது வழக்கறிஞருக்கோ தகவல் தரப்படவில்லை. அவரின் உடலில் சர்க்கரையில் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு ஆகியவை குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலும் இன்று சிறையில் அவரின் குடும்பத்தார் சந்திக்கச் சென்றபோதுதான் தெரியவந்துள்ளது.