விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், அங்கு ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாகவும், இப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு இந்தியா கொண்டு செல்ல வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல்.
ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இன்ப படுகொலை செய்யப்பட்டனர்.
அதேபோல இன்றைய இலங்கை அரசு தமிழர்களை வேட்டையாடி கொன்று குவித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு, அமெரிக்காவுடனும் இன்னும் ஒத்த கருத்துடைய நாடுகளுடனும் கலந்து பேசி, இலங்கையில் நடந்த இனப் படுகொலை தொடர்பாக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டும்.
இலங்கையில் இடம் பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்களது சொந்த இடங்களில் வாழ அனுமதிக்கப்படும் வரை, அவர்கள் சிங்களவர்களுக்கு இணையாக மரியாதையுடன் வாழும் வரை இந்தப் பொருளாதாரத் தடை நீடிக்க வேண்டும்.
சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றமாகும்.
இது தொடர்பாக இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தச் செய்ய சர்வதேச நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.