வெளிநாட்டிலே வாழக்கூடிய தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்: சட்டமன்றத்தில் மமக கோரிக்கை ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 10 மே, 2013

வெளிநாட்டிலே வாழக்கூடிய தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்: சட்டமன்றத்தில் மமக கோரிக்கை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnA27ZnYXWSukuo5mPetN0pMwfSOuwKFZSilXsAQdgNAGlQiwuYNOOwhB_C8azRn32wCcHLaZXixIjnqnbN1gOPS2rjdd6ns8WvoQkfX8nCnKnxSR7bmOwUzYV3Hbx7Gy-B1v5w5SAMlU/s1600/ramnad-jawahirullah.jpg

9.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:

அதிமுக அரசு வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழர்களுடைய பல்வேறு பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நல்ல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் மிக முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை அயல்நாட்டிலே வாழக்கூடிய, அயல்நாட்டிலே வாழக்கூடிய என்று சொல்வதைவிட, அயல் நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தமிழகத் தொழிலாளர்களுடைய பிரச்சினை பற்றி இந்த அரசு நிச்சயமாக, சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் சில கருத்துகளை என்னுடைய ஆலோசனைகளாக நான் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

 2010-ல் மத்திய அரசாங்கத்தினுடைய வெளிநாடு இந்திய விவகாரத்திற்கான அமைச்சகத்தில் இணைந்திருக்கக்கூடிய Research Unit on Inter National Migration வெளிநாட்டிற்குச் செல்லக்கூடியவர்கள் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேரா. எஸ். இருதயராஜன் என்பர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்விலே, உண்மையிலே நான் வியக்ககூடிய ஒரு புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவிலே இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலிருந்து வெளிநாட்டிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு அனுப்பக்கூடிய தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டிருக்கின்றார்கள், அதிலே முதலாவதாக வருவது கேரள மாநிலம், 42,922 கோடி ரூபாய் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த மாநிலத்திற்க அனுப்புகிறார்கள். அதற்கடுத்த நிலையிலே இருப்பது இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மாநிலங்கள் இல்லை. கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ரூ. 41,400 கோடியை செலுத்தியிருக்கின்றார்கள். மூன்றாவது இடத்திலே ஆந்திரா மாநிலம் 28,550 கோடி எனவே வெளிநாட்டில் பணியாற்றக்கூடிய தமிழர்களின் நலனை பேணி பாதுகாப்பதிலே நிச்சயமாக நாம் கூடுதல் அக்கறை செலுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 இதிலே என்ன பிரச்சினை என்றால் அதிகாரப்பூர்வாமாக தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று வேலையில அமர்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்கள் எத்தகை பேர் என்ற புள்ளிவிவரம் இருக்கின்றதா? என்றால் இல்லை, இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக, தொழிலாளர்களாக விசா பெற்று செல்லக்கூடியவர்களுடைய புள்ளிவிவரத்தை கணக்கிடக்கூடிய பணியை தமிழக அரசு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக வளைகுடா செல்லக்கூடிய தமிழர்கள் தங்களின் விசா, பணிக்காலம், வேலை செய்ய போகும் நிறுவனம், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய முழு தகவல்களையும் முதலில் தமிழக அரசு அளித்து அதை துôதரகம் பரிசோதித்தப் பிறகுதான் இவர்கள் நாட்டைவிட்டே வெளியே செல்லவே அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு அரசு நாடுகளாக இருக்கட்டும் அல்லது மலேசியவாக இருக்கட்டும். தாங்கள் கடன் பெற்று, பல்வேறு சுமைகளைப் பெற்று விசா எடுத்துச் சென்று, அங்கே மிக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, மிகப் பெரிய துயரங்களைப் படக்கூடிய தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய நலன்களை காப்பாற்றுவது நிச்சயமாக நம்முடைய அரசாங்கத்தின் கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக மிகப் பெரிய விழிப்புணர்வை நடத்த வேண்டும். வெளிநாட்டிலே உள்ள தமிழர்கள் வேலைக்குச் செல்லும்போது அங்குள்ள இடர்பாடுகள் என்ன? அங்கே அவர்கள் நடந்துக்கொள்ளக்கூடிய முறைகள் என்ன என்பதைப் பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இன்று அரபு நாடுகளுக்கும், சில தூர கிழக்கு நாடுகளுக்கும் செல்லக்கூடிய தொழிலாளர்கள் துயரங்களிலே மாட்டிக் கொள்ளும்போது அவர்களுக்கு அங்கேயிருக்கக் கூடிய நம்முடைய 100க்கு 90 சதவீதம் நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கு அங்கேயிருக்கக்கூடிய வெளிநாட்டு தூதரங்கள் சரியான முறையிலே உதவிகளை செய்வதில்லை. அமைப்புச்சாரா அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் நம்முடைய தமிழக அமைப்புகள் எங்களுடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட அவர்களுடைய துயரங்களை நீக்குவதற்கு நாங்கள் ஏதாவது பணிகளைச் செய்கின்றோம். இதற்குப் பதிலாக இங்கே ஒரு Distress Cell அதாவது அவர்கள் துயரத்தில் இருக்கும்போது இமெயில் வழியாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தங்களுடைய தகவல்களைக் கொடுத்து உடனே நம்முடைய தமிழக அரசு அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து அப்படி வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழகத் தொழிலாளர்களைக் காப்பாற்றக்கூடிய பணியைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது சவூதி அரேபியாவிலே ஏராளமான, இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுவும் கேரளாவிற்கு அடுத்த நிலையிலே இருக்கக்கூடியவர்கள் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான். அங்கே அந்த நாட்டு அரசாங்கம், அந்த நாட்டிலே இருக்கக் கூடியவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்பதற்காக நிதாகத் எனற ஒரு திட்டத்தை கொண்டுவந்து அதன்மூலமாக நம்முடைய இந்திய நாட்டைச் சார்ந்த ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுடைய மறுவாழ்விற்காகவும் இந்த அரசு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

2011-ல் தமிழக அரசு தமிழ்நாடு அயல்நாடுவாழ் தமிழர்கள் நல்வாழ்வுச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. தமிழ்நாட்டிற்கு வெறியே பிற மாநிலங்களிலே வாழக்கூடிய பிற மாநிலங்களிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கும், அதேபோல, இந்தியக் கடல் எல்லைக்கும் அப்பால் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குரிய எல்லா நலன்களையும் பாதுகாக்கக்கூடிய வகையிலே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தினுடைய பிரிவு 10 லே தமிழ்நாடு அயல் நாட்டுவாழ் தமிழர்களுக்கான நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று குறிபிடப்பட்டிருக்கின்றது. அந்த நல வாரியத்தை விரைவிலே இந்த அரசு அமைப்பதற்கான சட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு சில நேரங்களிலே அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்கள் ஏதாவது தண்டனை பெற்றிருப்பார்கள், அதற்குபிறகு அவர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவார்கள், வழக்கமாக அவர்களுக்கு டிக்கெட்டை மும்பை வரைதான் கொடுக்கிறார்கள். மும்பைக்கு இரவிலே வந்து இறங்கிவிட்டு, தாயகத்திற்கு வருவதற்குக் கையிலே காசில்லாமல் துயரப்படக்கூடிய தமிழகத் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள், எனவே கேரளாவில் வெளிநாட்டிலே வாழக்கூடிய அந்த மாநிலத்தவர்களுக்கென தனியாக ஒரு அமைச்சகம் இருக்கின்றது. முழுக்க முழுக்க நான் சொன்ன அத்தனைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையிலே அந்த அமைச்சகம் செயல்படுகிறது. எனவே வெளிநாட்டிலே வாழக்கூடிய நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்