உமர் (ரலி) அட்சியைக் கொண்டுவருவேன் - காந்தி முதல் கொண்டு, கெஜ்ரிவால் வரை... ~ சஹாரா தமிழ்

ads

புதன், 17 ஜூன், 2015

உமர் (ரலி) அட்சியைக் கொண்டுவருவேன் - காந்தி முதல் கொண்டு, கெஜ்ரிவால் வரை...



காந்தி முதல் கொண்டு, கெஜ்ரிவால் வரை உமர் (ரலி)
அட்சியைக் கொண்டுவருவேன் என்று சொல்கிறார்களே
அப்படி என்னதான் ஆட்சிசெய்தார் உமர் (ரலி)....?
சற்று நீளமான பதிவு அவசியம் படியுங்கள் பரப்புங்கள்.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போதுமதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண
உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மி குந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது,
அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது
கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள்.
அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை
செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள்
போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும்
தமது உதவியாளரை அழைத்து, அதைத்தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் பதறியவாறு, இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள்
அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி
கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும் என்றார்!

உதவியாளர் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார்.

அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.அவர்களை பின்தொடர்ந்து சென்றார் உதவியாளர் .

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த
சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள்
புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள்.

வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும்
இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப்
போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி
வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள்.

செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா?
அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க வேண்டும்
என்று விரும்பினேன்.

அதனால்தான்.” வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள் இதுபோன்ற ஆயிரம் உருக்கமான சம்பவங்களை சொல்லமுடியும் அதனால்தான் உலகில் பல மதத்தலைவர்களும், பல அரசியல் தலைவர்களும் உமரைப்போன்று ஆட்சிசெய்யவேண்டும் என்று இலட்சிய வேக்கை கொண்டுள்ளனர்...

- திருப்பூர் இலியாஸ்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்