உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு அவசர சட்டம் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 20 அக்டோபர், 2016

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு அவசர சட்டம்


சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து 28 நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த மாதம் அப்போலோவுக்கு சென்று முதல்வரை பார்த்தார். இதன்பின், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து துறைகளும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.35 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசிதழில், கவர்னர்  வித்யாசாகர் ராவ் நேற்று மாலை ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ஐ திருத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாததாலும், தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அவசர சட்டம் பிறப்பிப்பது அவசியமாகிறது. இந்த அவசர சட்டம், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் 3வது திருத்த அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் (மூன்றாம் திருத்தம்) அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம், தமிழக அரசிதழில் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் கவுன்சிலர்கள் அல்லது வார்டு உறுப்பினர்களின் பதவிக்கு சாதாரணமாக ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கிடையே இந்த அறிவிப்பாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4ந் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை பிறப்பிக்க வேண்டும். டிசம்பர் 31ந் தேதிக்கு மிகாமல் கூடிய விரைவில் அந்தத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான பதவி காலம் விரைவில் முடிய இருப்பதாலும், 5 ஆண்டு கால பதவி காலத்தை மேலும் நீட்டிக்க முடியாது என்பதாலும், உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக, தேர்தல் முடியும் வரை தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளான நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. அதுபோல, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. இந்த அவசர சட்டம், அரசின் முடிவை நடைமுறைப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம், அதிகாரிகளின் கைக்கு சென்றுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்