மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தண்டிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்துக் கொள்ளும் உடன்பாடு கையொப்பமாகியது. இந்த உடன்பாட்டின்படி இந்திய சிறைகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தண்டனைப் பெற்ற கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு எஞ்சிய தண்டனைக் காலத்தை அங்கு கழிப்பதற்கும் இதே போல் இலங்கை சிறையில் உள்ள தண்டனைப் பெற்ற இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு நம் நாட்டு சிறையில் எஞ்சிய தண்டனைக் காலத்தை கழிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.
இந்த உடன்பாட்டின் அடிப்படையில் கடந்த மார்ச் 2013ல் இலங்கை சிறையில் இருந்த 20 இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர இன்னும் 11 தமிழக கைதிகள் இன்னும் இலங்கையில் உள்ள வெளிகடா சிறையில் உள்ளனர்.
உடன்பாட்டின் படி இவர்களை இந்தியா அனுப்புவதற்கான நடைமுறைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் தமிழக அரசின் உள்துறை இலாகாவும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கைதிகளை அடையாளம் காண்பது அவர்களை இந்திய அனுப்புவதற்கான பயண ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்துவிட்டது.
ஆனால் தமிழக அரசின் உள்துறையில் இவர்கள் தொடர்பான கோப்புகள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளதால் இந்த 11 தமிழக கைதிகளும் நாட்டிற்கு திரும்ப வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உடனடியாக இந்த 11 தமிழர்களும் நாட்டிற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கைதிகளில் அதிகமானோர் 60 வயதை தாண்டிய நோயாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்
எம் எச் ஜவஹிருல்லாஹ்